Shamshera movie : கரண் மல்கோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகியுள்ள ஷம்ஷேரா படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் தற்போது ஷம்ஷேரா என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. கரண் மல்கோத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார். மேலும் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் படக்குழு, ஏசியாநெட் தளத்திற்கும் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளது. அதில் இயக்குனர் கரண் மல்கோத்ரா, நடிகர் ரன்பீர் கபூர், நடிகை வாணி கபூர், நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரன்பீர் கபூர்
இதில் ரன்பீர் கபூர் பேசியதாவது : “ஷம்ஷேராவில் தந்தை மகன் என இருவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு படத்திற்கும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயார்படுத்திக் கொள்வேன். அதேபோல் தான் இந்த படத்திற்கும் செய்தேன். சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். அவரை எதிர்ந்த்து நடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மிகவும் சவாலானது.
இப்படத்தில் நடித்தபோது நாயகி வாணி கபூரும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். இந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். ஷம்ஷேரா படத்தில் அவரது கேரக்டருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
ஷம்ஷேரா படத்தின் வி.எஃப்.எக்ஸிற்கு தற்போதே மிகுந்த பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் மட்டும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. என்னுடைய அடுத்த படமான பிரம்மாஸ்திராவிலும் நிறைய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் உள்ளன. இத்தகைய படங்களில் நடிப்பதற்காகத் தான் காத்திருந்தேன். அது அடுத்தடுத்து அமைந்தது எனக்கு லக் தான்” என கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ரன்பீர் கபூர் மீது புகார் சொன்ன விஜய் 66 நாயகி ராஷ்மிகா மந்தனா!

வாணி கபூர்
நடிகை வாணி கபூர் கூறுகையில், “ரன்பீர் உடன் நடிக்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன். இப்படம் மூலம் அது நடந்துவிட்டது. இதில் எங்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது என கூறிய வாணி கபூர், ரன்பீர் மற்றும் ரன்வீர் குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது : “இருவருமே தரமான நடிகர்கள். வித்தியாசமான குணாதிசியம் கொண்டவர்களாக இருந்தாலும் இருவரும் அழகானவர்கள். அதேபோல் மிகுந்த திறமைசாலிகள். அவர்கள் இருவருடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்
நடிகர் சஞ்சய் தத்திடம் தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும், பாலிவுட்டில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு உள்ள வித்தியாசம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “இரண்டுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. எங்கிருந்தாலும் நடிகர்கள், நடிகர்கள் தான். நாங்கள் இயக்குனரின் சிந்தனைக்கு ஏற்ப வேலை செய்ய வேண்டும். அது தான் எங்களுடைய கடமை.
கே.ஜி.எஃப் 2-வில் பிரசாந்த் நீல் உடன் பணியாற்றியதற்கும் ஷாம்ஷேராவில் கரண் உடன் பணியாற்றியதற்கும் எனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் இந்திய சினிமா உலகில் இருக்கிறோம். அதை மனதில் வைத்துதான் வேலையும் செய்கிறோம்.
ரன்பீர் கபூர் நல்ல மனிதர். அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர். அவர் இதேபோன்று வித்தியாசமான படங்கள் நிறைய நடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவேன். ஏனென்றால் நிறைய புதிய முயற்சிகளை செய்யும் போது தான் சிறந்த நடிகராக விளங்க முடியும் என நடிகர் சஞ்சய் தத் கூறினார்.
இதையும் படியுங்கள்... ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!
