நடிகர் சூர்யா, தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். மேலும் நடிகர் கார்த்தி, மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னால் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மும்புரமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்.டி.ஆர் கதாப்பாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரின் மனைவியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளார். 

என்.டி.ஆர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தபோது அவருடன் இணைந்து நடித்து, பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. எனவே இந்த படத்தில் ஸ்ரீதேவி ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக வருவதாகவும், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தை படமாக்க, அவரது கணவர் போனி கபூர் முயற்சி செய்து வருவதாகவும். இந்த படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.