தடைகளை தகர்த்த ‘ஜிப்ஸி’... 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...!

தமிழில் ‘குக்கு’, ‘ஜோக்கர்’ போன்ற யதார்த்த படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜு முருகன். தான் பேச நினைக்கும் அரசியலை எவ்வித சமரசமும் இன்றி திரையில் காட்டும் கலைஞன். தற்போது ராஜு முருகன் இயக்கியுள்ள ஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு கதாநாயகியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற வெரி, வெரி பாடலில் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றினர். காவல்துறையை காரசாரமாக விமர்சித்திருந்த இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது. 

படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் புது சிக்கல் பூதாகரமாக வெடித்தது. படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் தணிக்கைக்கு அனுப்பட்ட படத்தில் சில பிரச்னைகள் எழ ஆரம்பித்தன. படத்தின் சில காட்சிகளை ஏற்றுக் கொள்ளாத தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து எப்படியாவது தணிக்கை சான்றிதழ் பெற்றே ஆக வேண்டும் என டெல்லியில் முறையீடு செய்யப்பட்டது.  

அங்கு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளை வெட்ட வலியுறுத்தியுள்ளது. இதைக் கேட்ட படக்குழுவினர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சில காட்சிகளை நீக்க சம்மதித்தனர்.  குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிய பின்னர் டெல்லி தணிக்கை குழு தற்போது ‘ஜிப்ஸி’ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக படத்தை திரையிட படக்குழு முயன்று வருகிறது.