தமிழ் சினிமா உலகத்துக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்புதான். காரணம் அன்றுதான் ஏதாவது புதுப்படங்கள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கும். ஆனால் ரஜினி, விஜய் போன்றோரின் படங்கள் ரிலீஸாகும் வெள்ளிக்கிழமைகளோ தீபாவளிக்கு  இணையான கொண்டாட்டம் நிறைந்தவை.
 
ஆனால் அஜித் மட்டும் இந்த ‘வெள்ளிக்கிழமை’ லிஸ்ட்டில் சேர மாட்டார். காரணம், அவருக்கு ராசியான கிழமை வியாழன். சாய்பாபா பக்தரான அஜித்தின் படங்கள் என்னவானாலும் சரி, வியாழக்கிழமைதான்  ரிலீஸாகும். 2019ல் வியாழக்கிழமைகளில் ரிலீஸான அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களும் வரவேற்பு மற்றும் வசூல் பட்டியலில் முதல் இரண்டாம் மற்றும் ஆறாம் இடங்களில்  இருந்ததை கவனிக்க வேண்டும். 

அஜித்தின் இந்த வியாழக்கிழமை சென்டிமெண்டில் இதோ ரஜினியும் இணைந்துவிட்டார். அந்த வகையில் இன்று அவரது ‘தர்பார்’ ரிலீஸாகி இருக்கிறது. தாறுமாறான தீப்பிடிக்கும் மாஸ் ஓப்பனிங் படத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள். 

முருகதாஸ் தனது வழக்கமான ‘கருத்து சொல்லி’ மூளையை ஒதுக்கி வைத்துவிட்டு, தலைவரின் ரசிகர்களுக்காகவே செதுக் செதுக்கென செதுக்கியிருக்கிறார் படத்தை. அவரது ஆஸ்தான கேமெராமேனான சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவும் ஒவ்வொரு காட்சிகளையும் அல்வா போல் அழகாக்கியுள்ளது. 

காலா, கபாலி படங்களில் ஒரு மாதிரி ‘குணசித்திர நடிப்பு’ பாதைக்கு போன ரஜினி இந்த படத்தில் மீண்டும் பழைய அண்ணாமலை, வீரா ரஜினியாக அதிரடி ஆக்‌ஷன்! காமெடி! ரொமான்ஸ்! என வழக்கமான மாஸ் விஷயங்கள் கலந்த மனிதராக விஸ்வருபமெடுத்திருக்கிறார். 
ஆக்‌ஷன் தலைவன் ரஜினியின் படங்களில் காமெடியும் களைகட்டும். இந்த முறை ரஜினியுடன் கைகோர்த்திருப்பது யோகிபாபு. படத்தின் முதல் பாதியில் யோகிக்கு செம்ம ஸ்பேஸ். வரும்போதெல்லாம் சிரிப்பு ராக்கெட்டைக் கொளுத்திக் கொண்டே இருக்கிறார். 

சினிமாத்துறையை அறிந்தவர்கள் எதிர்பார்த்தது போலவே முதல் பாதியில் நயனுக்குதான் பெரிய ஸ்கோப் இல்லை.