சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு! 'மாமன்னன்' குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மாமன்னன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்தில், சாதி வேறுபாடுகளுக்கு இடையே மாட்டி தவிக்கும் மக்களின் குரலை எதிரொளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இவரின் முந்தைய படைப்புகளான, 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் இயக்கிய 'மாமன்னன்' படத்திற்கும் ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.
ஏற்கனவே திரையுலகில் ஒரு தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், வெற்றிக்கொடி நாட்டிய உதயநிதி ஒரு திறமையான நடிகராகவும், தொடர்ந்து வித்தியாசமான கதை தேர்வுகள் மூலம் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் படங்களை தேர்வு செய்து, நடித்து வந்த நிலையில் இப்படம் அவருக்கு விருந்து கொடுக்கும் விதத்திலேயே அமைந்தது . மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட பின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் 'மாமன்னன்' படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும், இதற்க்கு மேல் மக்கள் பணி தான் தனக்கு முக்கியம் என தெரிவித்தார்.
கனவு நிறைவேறியது... 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்த 'தங்கலான்' படப்பிடிப்பு! நடிகர் விக்ரம் ட்வீட்!
உதயநிதியின் கடைசி படம் எப்படிப்பட்ட கதைக்களத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்படம் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தற்போது... திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை கண்டு மேலும் திரையரங்குகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் மட்டும் இதுவரை 40 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளதாம்.
இந்த படத்தின் வெற்றியை பட குழுவினர் நாள்தோறும் கொண்டாடி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் கார் ஒன்றையும் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வழக்கம்போல் இந்த படத்திலும், மாரி செல்வராஜ் சாதி ரீதியான கதைக்களத்தை சர்ச்சை இல்லாமல் கையாண்டு இருந்தாலும், அரசியல் களம் பற்றி பேசியதும் சமத்துவம் குறித்து ஆழமாக எடுத்துரைக்கும் படிகான காட்சிகள் இடம் பெற்றது படத்திற்கு மேலும் வலு சேர்த்தது.
அதேபோல் இதுவரை காமெடி ரோல்களில் தன்னை புதைத்து கொண்டிருந்த வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பையும் இந்த படத்தில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், நல்ல வரவேற்பை பெற்று வரும் மாமன்னன் படம் குறித்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தன்னுடைய சமூக வலைதளத்தில் 'மாமன்னன்' படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது... "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்". என தெரிவித்துள்ளார்.