கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு மேல், ரிலீசுக்கு தயாராக இருந்த அணைத்து படங்களும் வெளியாகாமல் உள்ளது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண் குயின் உள்ளிட்ட  சில படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியானது.

திரையரங்கு மூடப்படுவதற்கு முன், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றிருந்த திரைப்படங்களில் ஒன்று 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஹைடெக் திருடர்களை மடக்கும் இரண்டு திருட்டு நாயகிகள், எதிர்பார்க்காத நேரத்தில் வெளிப்படும் சஸ்பென்ஸ், இப்படியெல்லாம் கூட திருட்டு நடக்கிறதா? என யோசிக்க வைத்திருந்தது இந்த படம். மேலும் குறைத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வசூலையும் பெற்று தந்தது.  

எப்போதும் ஒரு சில சீன்களில் மட்டுமே தலைகாட்டும் கெளதம் மேனன் இந்த படத்தில் ஒரு முழு கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியது மட்டும் இன்றி, இவர் நடித்த சீன், மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகவும் ஆனது.

ஓடிடி  தளத்திலும் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்தின் இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு,  தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில், ‘"சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு". காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காத்துல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.

இந்த டுவிட்டில் தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் டுவீட்டின் இடையிடையே பாபா முத்திரையை பதிவிட்டுள்ளதால், ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டு என்பது தெரியவந்துள்ளது.