சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போஹினி சொகுசு காரில், மாஸ்க் போட்டபடி அவரே டிரைவிங் செய்து காரை ஓட்டிச்சென்ற புகைப்படங்கள் தீயாய் பரவியது. இப்படி அவசர அவசரமா தலைவர் எங்கு செல்கிறார் என்றும் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

ஒருபக்கம் தன்னுடைய சினிமா பயணம், மற்றொரு புறம் தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்தின் பணிகள் என படு பிசியாக இயங்கி கொண்டிருந்த இவர், கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஓய்வு காரணமாக வீட்டிலேயே முடங்கினார். 

இதனால் மார்ச் 13 அன்று மூன்று திட்டங்களை பத்திரிக்கையாளர்கள் முன் வைத்து பேசிய ரஜினியின் அரசியல் பணி, மற்றும் அண்ணாத்த படத்தின் பணியும் அடுத்த கட்டத்திற்கு செல்லாமலேயே உள்ளது.  மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற கவலையில் அவருடைய ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் தான் ரஜினி லம்போஹினி காரில் சென்ற புகைபடங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் எங்கு சென்றார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் கேளம்பாக்கத்தில் உள்ள, தன்னுடைய பண்ணை வீட்டிற்கு ரஜினி மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன், மற்றும் பேரன் வேத்துடன் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் காரின் அருகில் நின்று எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தலைவர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி காரில் சென்ற புகைப்படம் வெளியானபோது  #LionInLamborghini என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி  இந்த புகைப்படத்தை வைரலாகி வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் குடும்பத்தோடு அதுவும் மாஸ்க் இல்லாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வைரலாக்க துவங்கிவிட்டனர்.