நடிகர் சங்கத் தேர்தல் நாளை  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஆனால் வாக்காளர் பட்டியல் முறையாக இல்லை தென் சென்னை மாவட்ட பதிவாளர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து விஷால் அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம்  ஏற்கனவே அறிவித்தபடி நாளை தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து நடிகர் சங்கத்தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில்  நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது.  

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது.
தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. 

தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இன்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.