ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் வரும் டிசம்பர் 17ம் தேதி பட பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சன் ஸ்டூடியோவில் ‘தலைவர் 168’ பட பூஜை போடப்பட்டுள்ளது. எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக ‘தலைவர் 168′படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. பெளர்ணமி நாள் என்பதால், இன்று படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேய் பிறை வருவதால், படக்குழு அவசர அவசரமாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெறவுள்ளதால், ஹைதராபாத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. நேரடியாக ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

’தலைவர் 168’படத்தின் அறிமுக பாடல் தயாராக இருப்பதாகவும் இந்த பாடலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி.இமான் கம்போஸ் செய்து முடித்து விட்டார். இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தல அஜித்தின் ’வலிமை’திரைப்படத்தின் படப்பிடிப்பும் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. ‘வலிமை’படத்திற்கான செட்கள் தயாராக இருக்கிறது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதனையடுத்து ரஜினி, அஜித் சந்திப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் இறங்க நாள் குறித்து வருகிறார். அஜித்தை அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து வரும் நிலையில், இருவரும் சந்திக்க உள்ளனர். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் களத்தில் எப்போதும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு கடந்த கால வரலாறுகளே சான்று.