பழசை மறக்காத ரஜினி! பஸ் கண்டக்டராக வேலைபார்த்த இடத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ
பெங்களூருவில் உள்ள பிஎம்டிசி டிப்போவுக்கு திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினி, தன்னுடைய நினைவுகளை ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வேறலெவல் ஹிட்டாகி உள்ளது. ஜெயிலர் படம் ரிலீசாகும் முன்பே இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற ரஜினி, அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு சென்ற ரஜினி, அங்குள்ள கோவில்களுக்கு சென்றபோது அம்மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்தார்.
இதன்பின்னர் கடந்த வாரம் சென்னை திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் அப்படத்தின் வெற்றியை கொண்டாடினார். இதில் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜையில் கலந்துகொண்டார் ரஜினி. த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... Exclusive : ரஜினிகாந்தின் வட இந்திய பயணம்! - ஆன்மிகமா? அரசியலா?- உண்மையை உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!
இந்த நிலையில், திடீரென பெங்களூருக்கு சென்ற ரஜினிகாந்த், ஜெயா நகரில் உள்ள பிஎம்டிசி பஸ் டிப்போவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இந்த பஸ் டிப்போவில் தான் வேலை பார்த்தாராம். அதனால் அங்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்ட ரஜினி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தற்போது சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துவிட்ட போதிலும், தன்னை வளர்த்துவிட்ட இடத்தை மறக்காத ரஜினியின் இந்த எளிமையான குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் பெங்களூரு ஜெயாநகர் பஸ் டிப்போ சென்ற போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இதையடுத்து சாமராஜ்பேட்டையில் உள்ள மந்திராலயா ராகவேந்திரா சாமி மடத்துக்கு சென்றார்.
இதையும் படியுங்கள்... ரஜினியால் சீமானுக்கும் லாரன்ஸுக்கு இடையே வெடித்த சண்டை... ஒருவழியாக முடிவுக்கு வந்தது