* முன்னாள் மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்ட பின், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, பா.ஜ. மீது ‘ஷாஃப்ட் கார்னர்’ வந்துவிட்டது. மத்திய அரசை விமர்சிப்பதை குறைத்துவிட்டார்:    ஜெயக்குமார். (ஆமாண்ணே, நாம அப்படியே அம்மா சொன்ன மாநில சுயாட்சி தத்துவத்தை இந்த நொடி வரைக்கும் பின்பற்றி, பா.ஜ.வுக்கு எதிராக தொண்டை வலிக்க குரல் கொடுத்து, போர்க்கொடி தூக்கிட்டு இருக்கிறோம் பாருங்க!)

* ’கண்டதை படித்தால் பண்டிதர் ஆகலாம்’ என என் தந்தை குமரி அனந்தன் சொல்வார். ஆனால், கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம் என எனக்கு இப்போதுதான் தெரிகிறது: தமிழிசை.(மேடம் இதுவரைக்கும் கவர்னர் ஆனவங்களை எல்லாம் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க, எல்லாம் அதிகார அரசியலின் மூலம் வழங்கப்படும் பதவிகள்தான்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் ஏன், ஏதோ மக்களே வாக்களிச்சு ஜெயிச்சு வந்த மாதிரி இவ்ளோ ஆர்பாட்டங்கள்னு தெரியலை!?....அப்படின்னு எதிர்கட்சிகள் விமர்சிக்குதுங்க.)

* நான் ஒன்றும் மோடியை பாராட்டவில்லை. அப்படி நான் பாராட்டிப் பேசியதாக ஒரு உதாரணத்தையாவது தர முடியுமா? அவரை நான் பாராட்டிப் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி பொய்யானது. நான் சொன்னது இதுதான்...எல்லா நேரமும் மோடியை குறை கூறக்கூடாது. அவர் செய்யும் நல்ல செயல்களை பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவரை குறை கூறும் போது நம்பகத்தன்மை இருக்கும்!: சசி தரூர். (ஆடு ஒண்ணும் காணாம போகலிங்க, ஆடு காணாம போனா மாதிரி கனா கண்டேன், அவ்வளவுதானுங்க. அப்புறம் தெரியாம இந்த பஞ்சாயத்த கூட்டுனதுக்கு மன்னிச்சுக்குங்க நாட்டாமை)

* சுயநலம் படைத்த சிலர் தான் எங்கள் கட்சியிலிருந்து பிற கட்சிக்கு சென்றுள்ளனர். தொண்டர்கள் எல்லாம் எங்களுடன் தான் இருக்கின்றனர்:    டி.டி.வி.தினகரன். (ஆமாண்ணே நமக்கெல்லாம் சுயநலன்னா என்னாண்ணே தெரியாதுல்ல. ஜெயலலிதா ஆட்சி செய்து, அவரோட நிழலா சசிகலா இருந்தப்ப அதிகார, ஆடம்பரத்தோட வாசனையே இல்லாம ஓலை குடிசையிலதானே நாமெல்லாம் ஒண்டிக் கெடந்தோம்!)

* நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.வில் எந்த பொறுப்பிலும் இல்லை. பொறுப்பில் உள்ளவரை தமிழக பா.ஜ. தலைவராக மேலிடம் நியமிக்கும். தமிழக தலைமை பதவி என்ன....அகில இந்திய தலைவர் பதவியை வழங்கினாலும் ரஜினி ஏற்றுக் கொள்ள மாட்டார்!: திருநாவுக்கரசர். (தல, நீங்க இப்ப காங்கிரஸ் எம்.பி.ங்கிறதை மறந்துட்டு பேசுறீங்களா? உங்களோட ஒரு வரியை பார்த்தா என்னவோ பா.ஜ.வோட செய்தி தொடர்பாளர் மாதிரி இருக்குது, இன்னொரு வரியை பார்த்தால் ரஜினியோட பி.ஆர்.ஓ. மாதிரி இருக்குது. காங்கிரஸுக்குள்ளே வாங்க பாஸு)