திமுக தலைவர் கருணாதியின் மறைவை அடுத்து நேற்று வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள், அனைவரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்,பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் நடிகைகள், ரேவதி, ப்ரபா, ஷீலா, சுகாசினி, ஜீவிதா ராஜசேகரன், ஸ்ரீபிரியா, குஷ்பு, அம்பிகா, லிஸ்ஸி, ஜோதி மீனா, காஞ்சனா, பசி சத்யா, சரண்யா பொன்வண்ணன், விஜயகுமார், மயில் சாமி, விக்ரம் பிரபு, நட்டி நடராஜ், ஜீவா, பாபி சிம்ஹா, கிருஷ்ணா, உதயநிதி ஸ்டாலின், நிழல்கள் ரவி ,ராதா ரவி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரஜினி பேச்சு:

கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. 

மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. 

ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் தாளங்கள் போட்டு புகுந்து விளையாடியவர் கலைஞர். அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள். யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.