தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஒருவாரம் ஆன்மீக பயணமாக திடீரென இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். 
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது அரசியல் வருகை குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், அரசியலுக்கு வந்தபாடியில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம், வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் இப்படத்தின் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடந்து வந்தது. இதில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். இதற்கிடையே, இயக்குநர் சிவா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படமும் முடிவாகி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினி. உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்தார். 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2018 மார்ச் மாதத்தில் காலா உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

இந்நிலையில், தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, மீண்டும் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த், இமயமலையின் அடிவாரமான உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார். அங்கிருந்து அடுத்தடுத்த இடங்களுக்கு காரில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு செல்லும் அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் ரஜினி கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.