ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ள, அந்த படத்தைக் காண அவரது ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான மோஷன் போஸ்டர், டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டானது. 

இந்நிலையில் "தர்பார்" படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2.O பட விநியோகத்தின் போது பெற்ற பணத்தை திரும்ப  தராமல் மோசடி செய்ததாக மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியோஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் லைகா நிறுவனம் இதற்கு முன்பு ரஜினியை வைத்து தயாரித்த 2.O படத்திற்காக லைகா தங்களது நிறுவனத்திடம் இருந்து ரூ.12 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதை திருப்பி செலுத்தாததால் தற்போது 23 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையை தராமல் லைகா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனு குறித்து ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதனால் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் புது சிக்கல் உருவாகியுள்ளது.