சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த, 'அண்ணாத்த' படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விரைவில் அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளதால், சிறுத்தை சிவா, இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும், 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்து விட வேண்டும் என முடிவு செய்தார். இதனால் இயக்குனர் சிவாவிடம் முடிந்தவரை விரைவில், 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என ரஜினி வேண்டுகோள் வைத்ததாகவும் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதியில் இருந்து, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் 'அண்ணாத்த ' படத்தின் படப்பிடிப்பு, முழு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற்று வந்தது. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடித்து வந்தனர்.

குறிப்பாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் அதீத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆம்... கொரோனா பரவல் காரணமாக நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உட்பட ஒட்டுமொத்த அண்ணாத்த படக்குழு மொத்தமும் பயோ பபுளுக்குள் இருந்து வந்தனர். அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது என உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதையெல்லாம் தாண்டி, தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பில் தன்னுடைய வேலையை காட்டி உள்ளது கொரோனா. பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியிலும், சுமார் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த, படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாக, ஆதாரம் இல்லாத தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் அனைவருமே தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன்னை தனிமை படுத்தி கொண்டது மட்டும் இன்றி, கொரோனா சோதனை செய்துகொண்டார். இதில் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. இது ரஜினிரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. எனினும் சில தினங்கள் தனிமையில் இருக்க கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.