ரஜினிகாந்த்!-இந்த தேசத்தையும் தாண்டி பெரும் புகழ் ஈட்டிவிட்ட மிகப்பெரிய ஈர்ப்பான வார்த்தை. உழைப்பை தவிர வேறெதையும் அறியாத ஜப்பான் இளைஞர்கள் போயஸ்கார்டன் தேடி வந்து அவரை வாழ்த்துகிறார்கள், பாகிஸ்தானில் 2.0-வின் தமிழ் வெர்ஷன் ரிலீஸாகிறது, சீன தியேட்டர்களில் கபாலிக்கு கைதட்டல் வரவேற்பு குவிகிறது. அமெரிக்க திரையரங்குகளில் கபாலியின் மூன்று நாள் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் நம் சூப்பர்ஸ்டார் பெற்று வைத்திருக்கும் பெரும் பேரை! 

ஆனால் வெறும் ரஜினிகாந்த் எனும் தனி மனிதனால் மட்டுமே இவ்வளவு பெரிய சாதனையை ஈட்டிட முடியுமா என்ன? இல்லை நிச்சயம் இல்லை. ரஜினியின் இமாலய வெற்றிக்குப் பின்னே மிகப்பெரிய பட்டாளம் இருக்கிறது. அவர்களின் தோளில் ஏறி நின்றுதான் சிகரத்தை தொட்டிருக்கிறார் ரஜினி. இவர்களை எந்த நாளிலும் நினைவில் வைக்க தவறியதுமில்லை, அப்படியான தகவல் மேற்கோளிடப்படையில் அதை மறுத்ததுமில்லை அவர். யார் அவர்கள்?....

 

* இயக்குநர் கே.பாலசந்தர் (ரஜினிக்கு சினிமா உலகின் விசிட்டிங்கார்டே இவர்தான்).

* இயக்குநர் மகேந்திரன் (ரஜினியின் நடிப்பை கூராக்கி, அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஆளுமை).

* தயாரிப்பாளர் தாணு (ரஜினிகாந்துக்கு ‘சூப்பர்ஸ்டார்’ எனும் பட்டத்தை வழங்கியவர். ரஜினியின் கணிசமான படங்களின் மெகா வசூலுக்கு இவரே அடிப்படை).

 

* ஏ.வி.எம். நிறுவனம் (முரட்டுக் காளையின் மூலம் ரஜினியை தென்தமிழக பகுதிகளில் ஷூட்டிங்குக்கு கூட்டிவந்து, அவருக்கு தமிழகமெங்கும் ஜனரஞ்சக ரசிகர்களை உருவாக்கிய நிறுவனம்.)

* இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் (ரஜினியை அதிரிபுதிரி மாஸ் ஹீரோவாக கட்டி எழுப்பிய மிக முக்கிய இயக்குநர் இவர். முக்கியமாக இவர் மூலமாகதான் ரஜினிக்கு ஹிட் வைபரேஷன் தொடர்ந்தது.)

* இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேவா, (ரஜினியை மக்களிடம் பெரிதாய் கொண்டு சேர்த்தது இளையராஜாவின் துள்ளல் இசையே. ரஜினி படங்களில் ஓப்பனிங் மாஸ் சாங் மிக முக்கியமானது. அது எஸ்.பி.பி. இல்லாமல்  சூப்பர் ஹிட்டாகாது.) 

* பாடலாசிரியர் வைரமுத்து (மாஸ் நடிகர் ரஜினியை, தலைவர் ரஜினியாக தூக்கிப் பிடித்தது இவரது வரிகள்தான். தமிழர்களின் உணர்ச்சிகளோடு ரஜினியை பின்னிப் பிணைய வைத்தவை வைரமுத்துவின் வார்த்தைகள்தான். தி.மு.க. தலைமைக்கும், ரஜினிக்கும் இடையில் ஒரு உறவுப் பாலமாகவே இருந்தார் இவர்.)  

* இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா (1990 களில் ரஜினியின் மார்க்கெட் திடீர் டல்லடித்தபோது இவர் தந்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்கள் அவரை மீண்டும் உச்சத்தின் உச்சத்தை தொட வைத்தன.)

* இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (ரஜினியின் ஃபேவரை இயக்குநர்கள் லிஸ்டில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. காரணம் ரஜினிக்கு அதிரிபுதிரியான ஹிட்களை தந்தவர். படையப்பா எனும் ரெக்கார்டு பிரேக் படத்தை தந்தவர். ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்களை உருவாக்கியது, இவரது முத்து தானே!) 

* இயக்குநர் ஷங்கர் (ஒருவித ஸ்டிரீயோ டைப்பில் ரஜினி போய்க் கொண்டிருந்தார், அது அவருக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் ரஜினியை அறிவியல் ஆளும் காலத்துக்கு ஏற்ப மாற்றியது இவரே. சிவாஜியில் இளமையாக்கி, எந்திரன் மற்றும் 2.0வில் அவரை ரிலோட் செய்துவிட்டதும் இவரே.) பஞ்சு அருணாச்சலத்தின் பாடல்கள் மற்றும் டயலாக்குகள், பி.வாசுவின் அசத்தல் படைப்புகள், இப்படி பட்டியலை இன்னும் கொஞ்சம் நீட்டலாம். அந்த ஆளுமைகள் இல்லாமல் ரஜினியின் வெற்றிச் சரித்திரம் இல்லை. 

ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி, ரஜினி தொடர்ந்து வெற்றிக் குதிரையாகவே இருப்பதற்கு காரணம் அவரது இனிய எதிரி கமல்ஹாசன் தான். அவருடனான போட்டிதானே ரஜினியை தொடர்ந்து ஹிட்டை நோக்கி வெறியெடுத்து ஓட வைத்தது!?... ஆனால் கமல் உள்ளிட்ட இந்த செலிபிரெட்டிகளுக்கெல்லாம் மேலே ரஜினியின் மார்க்கெட் மங்கிடாமல் முப்பது வருஷங்களுக்கு மேலாக அவரை தலையில் தூக்கி வைத்து ஓடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்தான் மிக மிக முக்கியம்.