கோலிவுட் திரையுலகில், 70 வயதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று இரவு முதலே, அவரது வீட்டின் முன் கூடி, கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ரஜினியை போலவே விதவிதமான கெட்டப்புகளில் அணிவகுத்து வந்து, தலைவரை போலவே ஸ்டைலில்  கெத்தாக நடந்து வந்தது, சூப்பர் ஸ்டாரையே நேரில் பார்ப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தது என பல ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படம் மற்றும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

மேலும்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை, சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருவதையும் பார்த்தோம். அந்த வகையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் "நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்".

அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். அவர் தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.