மாயாவி ரஜினிகாந்த்: சாதாரண ரஜினியை சூப்பர் ஸ்டார்! தலைவர்! கட்-அவுட் கடவுள்! என்றாக்கிய  டக்கர் டைரக்டர்கள்..!

நன்றி மறவாத மனிதர் ரஜினி. தனது ரசிகர்களிடம் எப்படியோ தெரியாது! ஆனால் தனக்கு வாழ்வு தந்த இயக்குநர்களிடம் அவர் கட்டுப்பெட்டியான மனிதராகத்தான் இருப்பார். 

ரஜினியின் கண் கண்ட கடவுள், கே.பாலசந்தர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் சிவாஜிராவ் எனும் நடிப்புக் கல்லூரி மாணவன், வைரமாக பட்டைத் தீட்டப்படாத  வெறும் கரி கல்லாகவே போயிருந்திருக்கலாம். அபூர்வ ராகங்கள், தில்லுமுல்லு என்று ரஜினியை படிப்படியாக வார்த்தெடுத்தவர் பாலசந்தர்தான். அவர் இருக்கும்போதும் இறந்த பின்னும் அவரை தொழுது வணங்குபவர் ரஜினி. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு கணிசமான ஹிட் படங்களை நடித்துக் கொடுத்திருக்கிறார். 

ரஜினியை ’பைரவி’ படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் கலைஞானம். அவருக்கு சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் ஃபிளாட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ரஜினி (அப்பாடா, இப்பவாச்சும்!) ரஜினியை  ஆக்‌ஷன் ஹீரோவாக்கி, வசூல் மன்னன் ஆக்கிய இயக்குநரென்றால் அது எஸ்.பி.முத்துராமன் தான். புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா என்று ஆரம்பித்து வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன், பாண்டியன் என எண்ணிலடங்கா படங்களை தந்தவர். இவரை தன் மூத்த அண்ணன், அப்பா ஸ்தானத்தில் வைத்து ரஜினி மதிக்கிறார். அவரது போயஸ் வீட்டில் எஸ்.பி.எம்-க்கு பெரும் மரியாதை உள்ளது. 

ரஜினிகாந்தை பெரும் உச்சம் தொட வைத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. அண்ணாமலை, வீரா, பாட்ஷா என இவரால் ரஜினி தொட்ட உயரம் இமயம். (ஆனால் இப்போது நொடிந்திருக்கும் சுரேஷ்கிருஷ்ணா ரஜினியின் கால்சீட்டுக்கு பல வருடங்களாக ஏங்கி நிற்கிறார்.)

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் ரஜினியின் சக்ஸஸ் டைரியில் முக்கியமானவர். படையப்பா, முத்து படங்கள் தமிழ் சினிமாவில் ரெக்கார்டு பண்ணியவை. அதிலும் முத்து மூலம் ஜப்பானில் கூட ரஜினிக்கு ரசிகர் மன்றம் உருவானது. இவரும் ரஜினிக்காக காத்திருக்கிறார் ஹிட் கதையுடன். 

அதேவேளையில் சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார் இருவரும் பாபா, லிங்கா எனும் இரண்டு அட்ட ஃபிளாப் படங்களை ரஜினிக்கு கொடுத்தனர். ரஜினிக்கு ‘மன்னன்’ எனும் பெரும் ஹிட் படத்தை கொடுத்த பி.வாசுதான், பாபா படத்தால் சறுக்கிய ரஜினியை ஐந்தாண்டுகளுக்கு பின் மீட்டெடுத்து ‘சந்திரமுகி’ எனும் சரித்திர ஹிட் படத்தை கொடுத்தார். ஆனால் ‘குசேலன்’ எனும் படத்தில் ரஜினியை குருமா ஆக்கினார். தட்டையான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியை ‘எந்திரன்! 2.0’ எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷனில் நடிக்க வைத்த பெருமை ஷங்கரை சேரும். 

பொதுவாக எந்த ‘வர்க்க’ அடையாளத்தினுள்ளும் சிக்காதவர் ரஜினி. அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கபாலி, காலா எனும் இரு படங்களில் காட்டியவர் பா.ரஞ்சித். இப்படங்கள் பெரிய ஹிட் இல்லை. ஆனால் ரஜினியை வேறு  கோணத்தில் அடையாளப்படுத்தின.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவை கையாண்ட கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட’ படத்தின் மூலம் ரஜினியின் இளமையை மீட்டெடுத்தார். ‘என் கேரியரில் மிக முக்கியமான விறுவிறு படம் இது’ என தர்பார் இயக்குநர் முருகதாஸ், ரஜினியால் பாராட்டப்பட்டுள்ளார். 

இவ்வளவையும் செய்துவிட்டு இப்போது மீண்டும் ’எஜமான், அருணாச்சலம் ஸ்டைலில் மீண்டும் கும்பலாக ஒரு கலகல படத்துக்குள்’ சிறுத்தை சிவா மூலம் களமிறங்குகிறார் ரஜினி. தலைவன் டா!

-    விஷ்ணுப்ரியா