நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு இரவு 12 மணி முதலே பல ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன், ரஜினியை சந்திக்க வேண்டும் என பல ரசிகர்கள் உட்சாகத்தோடு கூடியுள்ளனர். மேலும் இரவு 12 மணிக்கு ரஜினியின் ரசிகர்கள் அவரது வீட்டு முன் கேக் வெட்டி வழக்கம் போல் தலைவர் பிறந்தநாளை ஜமாய்த்தனர்.

அதே போல், ரஜினிகாந்தின் பெயரில் காலை முதலே பல்வேரு  கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து கொண்டு வருகிறது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று அறிவித்துள்ளதால் அவர் மீது கூடுதல் கவனமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசையாசையாக ரஜினியை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அவர் வீட்டு முன்பே கூடினாலும், அவர் வழக்கம் போல் பிறந்தநாள் அன்று வீட்டில் இல்லாததால் சோகத்துடன் ரசிகர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.