சர்வதேசளவில் புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரைத்துறை வரலாற்றில் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 2.0 படம் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.  செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது என்கிற சுற்றுச் சூழல் அக்கறையுடன் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியான ‘2.0’  பெரும் வரவேற்பை பெற்றது.


 
இந்தியாவில் அதிக பொருட்செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான 2.0, ஆசியாவிலேயே முதன்முறையாக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட படம். 713 கோடி ரூபாய் வசூலித்து சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் இசை, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 23 பிரிவுகளில் கோல்டன் ரீல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் ஒலித்தொகுப்பு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த வெளிநாட்டுப்பட பிரிவிலும் 2.0 படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பின் இறுதி பரிந்துரை பட்டியலில் இந்தப் படத்திற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.