பாராளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஒதுங்கியிருக்கிறாரே ஒழிய தேர்தல் தொடர்பான அத்தனை செய்திகளையும் மிகவும் துல்லியமாக கவனித்துக்கொண்டிருக்கிறாராம்.

இன்னும் மூன்று வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும்  ஏஆர்.முருகதாஸ் படம். அதற்கடுத்து கார்த்தி சுப்புராஜ்க்கு மற்றொரு படம். மூன்றாவதாக  அஜித்தை இயக்கிக் கொண்டிருக்கும் வினோத்தின் படம் என்று அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தனது சினிமா ஷெட்யூலை டைட்டாக வைத்துக்கொண்டிருக்கும் ரஜினி, அரசியலில் இருந்து தான் தொடர்ந்து எஸ்கேப் ஆவது குறித்து கிண்டலடிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ளத்தவறவில்லையாம்.

அதை ஒட்டியே இந்தத் தேர்தல் செய்திகள் கண்காணிப்பு. அதிலும் குறிப்பாக கமலின்  சினிமா செல்வாக்கு, அவரது அரசியல் ஈடுபாட்டு எந்த அளவுக்கு மக்களிடம் மாறுதலை உருவாக்கியிருக்கிறது, வாக்கு சதவீதம் எவ்வளவு கிடைத்திருக்கிறது. அகில இந்திய அளவில் அவருக்கு என்ன மரியாதை  என்பதை நடக்கவிருக்கிற தேர்தல் தெளிவாக சொல்லிவிடும் அல்லவா?

இன்னொரு பக்கம் கூட்டணி சேர்ந்திருக்கும் தேமுதிக.வின் வாக்கு சதவீதம்  கூட்டணியால் உயருமா சரியுமா, அவரது தனித்துப் போட்டியிட்ட காலத்தில் கிடைத்த வாக்கு சதவீதம் இவையெல்லாம் எதனால் மாறி இருக்கிறது, என கணித்துச்சொல்வதற்கு ஒரு குழுவே இருக்கிறது ரஜினிக்கு.!

அதை கணக்கிட காத்திருக்கிறார் ரஜினி காந்த்.   ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் அமருமா,அல்லது தற்போதைய எதிர்க்கட்சியான திமுக ஆட்சி பீடம் ஏறுமா அப்படி நடந்தால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகும்  வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்?   அதிமுகவை உடைத்து வெளியில் வந்த  தினகரனின் அ.ம.மு.க.வின் நிலை என்ன? அதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக  இந்த கட்சிகளில் எது அமரும்? இவ்வளவையும்  அளந்து பார்த்து விட்டுதான் ரஜினி தனிக்கணக்கு தொடங்குவார்  என்கிறார்கள்.   

ஆக முருகதாஸ் படப்பிடிப்புக்கு மும்பைக்குப் போனாலும் ரஜினியின் மனசு முழுக்க தமிழக தேர்தல் கூட்டணிக் கணக்குகளில்தான் இருக்கும்.