மும்பை ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து வாக்களிப்பதற்காக சென்னை வந்த ரஜினி மீடியாக்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கப்சிப்பென்று பூத்தை விட்டு வெளியேறினார்.

இந்தத் தேர்தலில் மறைமுகமாக பா.ஜ.கவை ஆதரித்துவந்த ரஜினி  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு இன்று காலை சிக்னல் தருவதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் காலை 7 மணிக்கே ரஜினி வாக்களிக்க வந்துவிடுவார் என்று அவரது பிஆர்ஓ நேற்று காலையிலேயே அனைத்து மீடியாக்களுக்கும் தகவல் அனுப்பி விட்டார். 

இதனால் வாக்களிக்கவரும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வெளியே ஏராளமான செய்தியாளர்கள் காத்திருந்தனர். ரஜினி ஓட்டு போட்டுவிட்டு கண்டிப்பாக ஏதாவது சொல்வார் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். 

அதன்படியே இன்று காலை ரஜினி வாக்கு சாவடிக்கு வந்தார். ரஜினியை பார்த்ததும் அந்த சாவடியில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ பெரிய தலைவர் வந்துவிட்டதை போல எழுந்து நின்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்தான்! ஆனால் தன்னை பார்த்ததும் ஊழியர்கள் எழுந்து நிற்பதை பார்த்த ரஜினி "உட்காருங்கள்" என்று சொன்னார். பிறகு தன்னுடைய ஓட்டை போட்டுவிட்டு வெளியே வந்தார்.  வெளியே வந்தவர் "சிக்னல்" தருவார் என்று பார்த்தால், எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டார். 

சமீபகாலமாக மீடியாக்களில் எந்த சப்ஜெக்ட் தொடர்பாக வாயைத் திறந்தாலும் அது இறுதியில் பெரிய வம்பிலேயே போய் முடிவதால்தான் ரஜினி பல்லைக் கடித்துக்கொண்டு வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.