ரஜினி ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர் சற்றுமுன்னர் வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதன் 4 மொழி மோஷன் போஸ்டர்களையும் ரசிகர்கள் மிக வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘தர்பார்’பட மோஷன் இன்று மாலை வெளியிடப்படும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சுமார் பத்து தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நேற்று முன் தினம் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் ஒவ்வொரு மொழியிலும் பிரபல நடிகர்கள் வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தது.

அதன்படி தமிழில் கமலும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் இந்தியில் சல்மான் கானும் இப்போஸ்டர் வீடியோவை வெளியிடுகின்றனர். 42 செகண்டுகள் ஓடும் வீடியோவில் ரஜினி காவல்துறை யூனிஃபார்மில் இருந்தாலும் ஒரு பெரும் பட்டாக்கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் சுழற்றுகிறார். இந்த மோஷன் போஸ்டரில் படத்தின் நாயகி நயன்தாராவோ காமெடியன், வில்லன் நடிகர்கள் உள்பட யாரும் இடம்பெறவில்லை. அனிருத் வழக்கம்போல் தனது அதிரடி இசை இரைச்சலை அள்ளித் தெளித்திருக்கிறார்.