அரசியல் செயல்பாடுகளில் ரஜினி மிகவும் மந்தமாகிவிட்டார். வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்ப்பார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில்,கஜா புயல் நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தனது மன்ற நிர்வாகிகளை நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

கஜா புயல் நிவாரணப்பணிகளில் ரஜினியின் அரசியல் போட்டியாளர் களம் இறங்கி வேலை செய்த நிலையில், ரஜினி பேருக்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை. இதை சீமான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் அறிவித்த ரஜினி லாரிகளில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே அனுப்பினார்.

ஆனால் மற்ற கட்சியினரைப்போலவே ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் பங்குக்கு சில நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே செய்தனர். தமிழ்நாடு முழுக்க இருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். 

இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நேற்று நேரில் வரவழைத்து சந்தித்தார். நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

அப்போது நிர்வாகிகளில் சிலர் ரஜினி மகள் செளந்தர்யாவின் திருமணத்துக்கு தங்களுக்கு அழைப்பு வருமா என்று கேட்டபோது ‘நிச்சயமாக வராது. இருந்த இடத்துல இருந்தே வாழ்த்துங்க போதும்’ என்று கறாராக சொல்லி அனுப்பினாராம்.