ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த இருவர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என, ஆணித்தனமாக அறிவித்த பின்னர்... கட்சி துவங்குவதற்கு பதிலாக, ரஜினி மக்கள் மன்றம் என்கிற அமைப்பை துவங்கினார். இதில் பலர் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிவுறுத்தலின் படி, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது, தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் பேசி, அவர்களின் கருத்தையும் கேட்டு வருகிறார், அதே போல் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரு உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "ரஜினி மக்கள்‌ மன்ற வளர்ச்சி பணிகளில்‌ கவனம்‌ செலுத்‌தி மன்றத்தை வளர்க்காமல்‌, மன்றத்‌தின்‌ ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்‌ செயல்களில்‌ ஈடுபட்ட காரணத்தினால்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட துணை செயலாளர்‌ ராஜமூர்த்தி அவர்கள்‌ (ஏற்கெனவே மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவினால்‌ 7-9-2018 ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்‌) காஞ்சிபுரம்‌ மாவட்ட செயற்குழு உறுப்பினர்‌ கமலக்கண்ணன்‌ ஆகியோர்கள்‌ மன்ற பொறுப்புகளில்‌ இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்‌. 

மேற்கண்ட இருவரும்‌ எவ்வித மன்ற பணிகளிலும்‌ ஈடுபடக்‌ கூடாது எனவும்‌, இனி வரும்‌ காலங்களில்‌ இவர்களது நடவடிக்கைகளை மாநில தலைமை கூர்ந்து கவனித்து, அவர்களது செயல்பாட்டினை கருத்‌தில் கொண்டு மீண்டும்‌ பொறுப்பு வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படும்‌.

ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளும்‌, உறுப்பினர்களும்‌ மேற்கண்ட இருவரிடம்‌ எந்த வித தொடர்பும்‌ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மீறி செயல்படுபவர்கள்‌ மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.