இறந்துபோன முதியவர் ஒருவருக்கு வழங்கிய சவப்பெட்டியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொட்டை எழுத்துக்களில் விளம்பரம் செய்திருப்பது வலைதளங்களில் சர்ச்சை ஆகியிருக்கிறது. ’எதில் எல்லாம் விளம்பரம் தேடுவது என்கிற விவஸ்தை கூடவா இல்லை? என்று ரஜினி மக்கள் மன்றத்தினரை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன.

என்றாவது ஒருநாள் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்தே தீருவார் என்கிற நப்பாசையுடன் ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினர் போன்ற அமைப்புகள் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 800 ரூபாய் செலவழித்துவிட்டு எட்டாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேடும் அவர்களது போக்கு பலமுறை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இறந்துகிடந்த முதியவர் ஒருவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் சவப்பெட்டி ஒன்றை வழங்கி அவரை மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தங்கள் RMM for the People என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர்கள்,...கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையமருகில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் காலமானார். அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் ரஜினி மக்கள் மன்றம் வழங்கிய குளிர் பெட்டியில் வைத்துப் பாதுகாத்து மருத்துவ பரிசோதனைகள் முடிந்து இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது...என்று பதிவிட்டிருந்தனர். அந்த சவப்பெட்டியில் கொட்டை எழுத்துக்களில் இருந்த ரஜினி மக்கள் மன்றன் என்ற எழுத்துக்கள் பலரையும் உறுத்தவே,...’அடேய் சவப்பெட்டியில கூடவா விளம்பரம்?’என்ற கமெண்டுகள் குவிந்து வருகின்றன.