அயோத்தி விவகாரம் தொடர்பாக இன்று காலை முதலே போயஸ் இல்ல வாசலில் காத்திருந்த நிருபர்களை சில நிமிடங்களுக்கு முன்பு சந்தித்த ரஜினி,’அயோத்தி தீர்ப்பை  மதிக்கிறேன் வரவேற்கிறேன்'என்று பேசி வேறு கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் விடைபெற்றார்.

அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பளித்ததுடன் அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து ரஜினியின் கருத்தை அறிய இன்று காலை முதலே அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் மீடியாக்கள் காத்திருந்தன. இந்நிலையில் சுமார் 1.40 மணியளவில் நிருபர்களைச் சந்தித்த ரஜினி,’அயோத்தி தீர்ப்பை நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். இந்தியாவின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு அனைத்து மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்கவேண்டும். நன்றி.வணக்கம்’என்று மிக ரத்தினச் சுருக்கமாக தனது பேட்டியை முடித்துக் கொண்டார். அடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றார் ரஜினி.