நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு அவதூறுகளைக் கூறி வந்த நடிகை விஜயலட்சுமி தற்போது அவரது பரம வைரியான ரஜினியிடம் உதவி கேட்டதும் பதிலுக்கு ரஜினி உதவி செய்தததாக மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.

விஜய், சூர்யாவுடன் ’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி.அடுத்து சீமான் இயக்கத்தில் ‘வாழ்த்துகள்’படத்திலும் நடித்தார்.  கடைசியாக ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வந்தார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

முன்பே பலமுறை தனது சிகிச்சைக்குப் பண உதவி கேட்டு நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் வைத்திருந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு, தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் என்றும் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி “வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.

அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.”இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

எத்தனையோ நடிகர்கள் ஏற்கனவே உதவி வந்த நிலையில் இந்த ரஜினி வீடியோ நாடகம் அரசியல் ரீதியாக தன்னைத் தொடர்ந்து அட்டாக் செய்துவரும் சீமானுக்கு செக் வைக்கும் முயற்சி போன்றே தோன்றுகிறது. யார் கண்டது அடுத்து ரஜினி கட்சியில் விஜயலட்சுமி ஐக்கியமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.