’தர்பார்’படப்பிடிப்பு முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்கு முன் கிடைக்கும் இடைவெளியில் ரஜினி தனது அரசியல் பணிகளில் கொஞ்சம் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் இமயமலைப் பயணம் ரசிகர் மன்றத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ஆன்மிக அரசியல்’என்று அறிவித்தீர்கள், ஆன்மிகம் ஓகே...அந்த அரசியலையும் கொஞ்சம் கண்ணில் காட்டக்கூடாது’என்று விரக்தியில் கமெண்ட் அடிக்கிறார்கள்.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘தர்பார்’படப்பிடிப்பில் டப்பிங் தவிர மற்ற பணிகளை முடித்துக்கொடுத்த ரஜினி, சூட்டோடு சூடாக சன்பிக்சர்ஸ், சிறுத்தை சிவா கூட்டணியில் தான் நடிக்கப்போகும் 168வது பட அறிவிப்பையும் வெளியிட்டார். சிவாவின் படப்பிடிப்பு தொடங்க குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்ற நிலையில் அவர் அந்த ஒரு மாதத்தில் 2021 தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக சின்னதாக ஒரு பிள்ளையார் சுழியாவது போடுவார் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் ஆவலாகக் காத்திருந்தனர்.

ஆனால் அரசியல் குறித்து மூச் விடாத ரஜினி நேற்று ஞாயிறன்று திடீரென்று ஞாநியாக மாறி இமயமலைக்குப் புறப்பட்டார்.  நேற்று காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு    மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூன் சென்றார். இன்று  உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தை  ரஜினி அடைந்துள்ளார். அங்கு பக்தர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்புகைப்படங்களை மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து வரும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ,...ஆன்மிகப் பயணத்தை முடிச்சுட்டு வந்து கொஞ்சமாவது அரசியல் பண்ணு தலைவா’என்று கதறுகின்றனர்.