சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள  வீடியோ, ரசிகர்களை மட்டும் இன்றி திறையுலகினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு, தமிழ் நாட்டில் மட்டும் இன்றி, மலேசியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட உலக நாடுகள், முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இவரின் ரசிகர்கள் பலத்தை ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீடு போது தான் பார்க்க முடியும். திரைப்படத்தை திருவிழா போல் வரவேற்று கொண்டாடி மகிழ்வார்கள்.

அந்த வகையில், பொங்கலுக்கு வெளியான 'பேட்ட'  படம், ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.  

திரைப்படத்தின் வசூல் பாதிக்கக் கூடாது, என திருட்டு விசிடி, கைபேசியில் படத்தை படம்பிடித்து, போன்றவற்றை தடுக்க, திரையுலகினர் பல்வேறு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  ஆனால் அனைத்தையும் மீறி திரைப்படம் வெளியான அதே தினங்களில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகி  ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் 'பேட்ட' திரைப்படம் வெளியாகி, ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அரசு பேருந்தில் 'பேட்ட'  படம் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி ரசிகர் ஒருவர்,  கரூரில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது திருட்டு தனமாக பிரபல திரையரங்கில் எடுக்கப்பட்ட 'பேட்ட'  படத்தை ஒளிபரப்பி உள்ளனர்.  இதனை தன்னுடைய செல் போனில்,  படம் பிடித்த ரஜினி ரசிகர், அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கொதித்தெழுந்து...  இப்படிப்பட்ட செய்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கூறி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.