விஸ்வாசம்  தியேட்டரில் கத்து நடந்தை அடுத்து பேட்ட படம் ஓடிய திரையரங்கில் ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. கட்டிடத் தொழிலாளியான இவர் தீவிர ரஜினி ரசிகர். கடந்த 12ம் தேதி பகல் காட்சிக்கு பேட்ட திரைப்படத்தை பார்ப்பதற்காக மணிகண்டபிரபு சென்றுள்ளார். படம் முடிவதற்குள் தலையில் பலத்தகாயத்துடன் வீட்டிற்கு திரும்பினார் மணிகண்ட பிரபு. திரையரங்கிற்குள் புகைபிடித்ததால் தன்னை ஒருவர் தாக்கியதாக அவர் வீட்டில் கூறி உள்ளார்.
 
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மணிகண்டபிரபு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சந்தேக மரண வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லதாங்கி திரையரங்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போது மணிகண்ட பிரபுவை தாக்கிய நபர் அடையாளம் காணப்பட்டார்.

திரையில் பேட்ட படம் ஓடிக் கொண்டிருக்கும் போது வாயில் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்த மணிகண்ட பிரபு சத்தமும் போட்டுள்ளார். இதனால், அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த திருமூர்த்தியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மணிகண்டபிரபுவை சட்டையை பிடித்து வெளியே இழுத்துச்சென்ற திருமூர்த்தி அங்கு கிடந்த கட்டையால் உச்சந்தலையில் கடுமையாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்ட பிரபு தலையில் காயத்துடன் அங்கிருந்து வெளியே செல்லும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளி திருமூர்த்தியை கைது செய்தனர்.