’அரசியல் கட்சி துவங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்’என முதல்முறையாக வெளிப்படையாகப் பேட்டி அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின்  இப்பேட்டியால் ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இன்று கமலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிய ரஜினி மிக சர்ப்ரைஸாக அடுத்தடுத்து இருமுறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது தனக்கு பாஜக சாயம் பூசப்படுவதைப் போட்டு உடைத்த ரஜினி, தமிழகத்தில் முக்கிய ஆளுமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டோம், அயோத்தி தீர்ப்பில் மக்கள் பொறுமை காக்கவேண்டும் என்பது உட்பட பல கருத்துக்களை ஆணித்தரமாக வெளியிட்ட நிலையில் அவரது திரைப்பட நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,’ எனது அரசியல் கட்சியை அறிவித்து முழுமையாக அரசியலில் ஈடுபடும்போது நிச்சயமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்’என்று உறுதிபடத் தெரிவித்தார். தற்போது ‘தர்பார்’படத்தை முடித்திருக்கும் ரஜினி அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தையும் அறிவித்திருக்கிறார். ரஜினியின் இப்போதைய அறிவிப்பின்படி அவர் இதற்கு மேல் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்று தெரிகிறது.