பெரும் தயக்கத்துக்குப்பின் ‘பேட்ட’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர ரஜினி சம்மதம் தெரிவிப்பதைத் தொடர்ந்து நாளை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும்  ‘பேட்ட’ படப் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதே தேதியில் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸாவதால் குழப்பங்களும் நீடிக்கின்றன.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில் மேடை நிகழ்ச்சிகளை தவிர்க்கும் முடிவில் இருக்கும் ரஜினி பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால் நேற்று திடீரென மனம் மாறி அவர் சம்மதிக்கவே அவசர அவசரமாக ஆடியோ வெளியீட்டு நிக்ழவை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.