‘2.0’ படத்துக்கென பிரத்தியேகமாக நடந்த ஒருவிழாவில் ரஜினி ஷங்கருடன் கமல் அடுத்து நடிக்கவிருக்கும் ‘இந்தியன்2’ படத்துக்கு வாழ்த்துச் சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதே போல் ரஜினியின் வாழ்த்துச் செய்தி வந்து சேர்ந்த  அடுத்த சில நிமிடங்களிலேயே கமலும் ரஜினிக்கும் ஷங்கருக்கும் உடனே ஒரு வாழ்த்துச்செய்தி அனுப்பினார். 

அதில், ‘2.0’ நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றும் அப்படம் மாபெரும் வெற்றிபெற மனதார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்குமுன்  கமல், ரஜினி மத்தியில் மட்டுமல்ல வேறெந்த இரு போட்டியாளர்களுக்கும் நடுவில் நடைபெற்றிராத அபூர்வ வாழ்த்துப் பரிமாற்றங்கள் இவை.

1975-கமல் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்தான் ரஜினி அறிமுகமானார் என்றாலும் இருவரும் போட்டியாளர்களாக மாறி ஒரே தேதியில் படங்கள் ரிலீஸாகத் துவங்கியது 1978 முதல் தான். அப்படி இருவர் படங்களும் முதலில் மோதிக்கொண்ட ஆண்டு 1978. படங்கள் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மற்றும் ‘பைரவி’. அந்த முதல் மோதலில் கமலின் இளமை ஊஞ்சலாடுகிறதில் வில்லனாக ரஜினியும் இருந்தார்.

அடுத்து ஒரு புள்ளிவிபரத்தின்படி, கடந்த 30 ஆண்டுகளில் கமல், ரஜினி படங்கள் சுமார் 25 முறை ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 15 முறை கமல் படங்களும் 10 முறை ரஜினி படங்களும் வெற்றிபெற்றுள்ளன. இருவர் படங்களுமே வெற்றி பெற்ற சமயங்களும், இருவர் படங்களுமே ஊத்திக்கொண்ட வரலாறும் அதில் அடக்கம்.

அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த கமல் படங்கள்...’எனக்குள் ஒருவன்’[ரஜினியின் வல்லவனுக்கு வல்லவனுடன் மோதித்தோற்றது], ‘குணா’ [தளபதியிடம் தோற்றது] ‘குருதிப்புனல்’, மும்பை எக்ஸ்பிரஸ்’[முறையே ‘முத்து’,’சந்திரமுகி]

கமலிடம் கவ்வல் வாங்கிய ரஜினி படங்கள்...’ரங்கா[சிம்லா ஸ்பெஷல்] தீ’ [மீண்டும் கோகிலா], மாவீரன் [புன்னகை மன்னன்], பாண்டியன் [தேவர் மகன்]

இன்றைய நிலவரப்படி, மேற்படி இருவருமே சினிமாவிலிருந்து மெல்ல ரிடையராகி அரசியலில் காலடி எடுத்து வைத்திருப்பதால் நடிக்கும் படங்களின்  மிக சொற்பமாக இருக்கும் என்பதால் இருவரும் ஒரே தேதியில் மோதிக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதுதான் இனிப்பும் கசப்பும் கலந்த செய்தி.