'தர்பார்' படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓய்வெடுப்பதற்காக ரஜினி இமயமலைக்கு பயணம் செல்லவிருப்பதாகவும் அங்கு அடுத்த பட ஷூட்டிங் தொடங்கும்வரை ஓய்வெடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

காவல்துறைப் பின்னணியில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி, நயன்தாரா கூட்டணியில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை மும்பையிலேயே படமாக்கிவிட்டது படக்குழு.ப்ரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ரஜினியின் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதனிடையே  சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார். தற்போது மும்பையில் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையில் இறங்கிய ரஜினி அநேகமாக சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ணுவார் என்றும் அதை ‘விஸ்வாசம்’சிவா இயக்குவார் என்றும் தெரிகிறது.

இந்த சன் பிக்சர்ஸ் படம் தொடங்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தால் மீடியாக்களின் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கும் பொருட்டு ரஜினி வழக்கம்போல் இமயமலையின் ஏதோ ஒரு ஏரியாவுக்குப் போய் ஓய்வெடுத்துவிட்டுத்தான் திரும்புவார் என்கிறார்கள்.