கமல் போல் தனது கடைசிப் படத்தை விரைவில் ரஜினி அறிவிப்பார் என்று நாம் அறிவித்திருந்தது குத்துமதிப்பாக பலிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  இதன் பிரதிபலிப்பாக அடுத்த படம் குறித்து கேள்வி கேட்ட நிருபரிடம் எரிச்சலாக பதில் அளித்தார் ரஜினி.

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஓய்வின்றி நடித்து வரும் ரஜினி, தனது அடுத்தடுத்த பட அறிவிப்புகளை முந்தைய படம் முடியுமுன்னரே அறிவித்துவந்தார். இதே வரிசையில்தான் ‘பேட்ட’ ரிலீஸுக்கு முன்னரே சூப்பர் ஸ்டாரை வைத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் பட அறிவிப்பும் வெளியானது.

இச்செய்தியை தனது ட்விட்டர் பதிவில் முருகதாஸ் வெளியிட்டபோது, அதற்கு ரஜினி மவுனமாக இருந்ததே சம்மதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் படத்தை தயாரிக்கவிருக்கும் நிறுவனம் தொடர்பான குழப்பங்கள் மட்டும் நீடித்து வந்தன.

இந்நிலையில், கமல் போலவே அரசியலில் தீவிரமாக இயங்க விரும்பும் ரஜினி, விரைவில் அவர் பாணியிலேயே தனது இறுதிப்பட அறிவிப்பை வெளியிடக்கூடும் என்ற செய்திகள் நடமாடின. ஆனால் அது ஏ.ஆர். முருகதாஸ் படம் நடைபெற ஆபத்தாக இருக்காது என நம்பப்பட்டது. 

ஆனால் இன்று தனது இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஜினி ‘அடுத்த படத்தைப் பத்தி ‘பேட்ட’ ரிலீஸுக்கு அப்புறம் பாக்கலாம்’ என்று சற்று எரிச்சலாகவே பதிலளித்தார். ரஜினியின் இந்த பதிலைப் பார்க்கும்போது ‘பேட்ட’ படத்தோடு அவர் சினிமாவுக்கு டாட்டா சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.