கடந்த இரு வாரங்களுக்கு முன்பே நமது இணையதளத்தில் சொல்லியிருந்தபடி தனது அடுத்த படத்தயாரிப்பாளர்களாக சன் பிக்சர்ஸையும் இயக்குநராக சிறுத்தை சிவாவையும் உறுதி செய்துள்ளார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி நாம் வெளியிட்டிருந்த செய்தி,...லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் மிக விரைவில் தனது அடுத்த படத்தை அறிவிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார் ரஜினி. ஆனால் அடுத்த படத்துக்கான சம்பளமாக அவர் கேட்கும் தொகையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுவதாகத் தகவல்.

அடுத்த தேர்தலுக்குள் இன்னும் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து கல்லா கட்டவேண்டும் என்ன்னும் முடிவில் உறுதியாக இருக்கும் ரஜினி, தொடர்ச்சியாக சில இயக்குநர்களிடம் கதை கேட்டு அவற்றில் ஒன்றிரண்டை டிக்கும் அடித்து வைத்துள்ளார். ஆனால் அப்படத்தை தயாரிக்க அவர் தேர்ந்தெடுகும் தயாரிப்பாளர்கள் அத்தனை பேருமே 60 முதல் 70 கோடிக்கு மேல் ரஜினிக்கு சம்பளமாகக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால் ரஜினியின் டார்கெட்டோ 100 கோடி என்பதாக இருக்கிறது.இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து விட்டால், படத்தின் தயாரிப்பு செலவு, மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம் என்று மிகப்பெரிய பட்ஜெட் வரும் என்றும், அப்படி அந்த பட்ஜெட்டில் எடுத்தால் லாபம் பார்க்க முடியாது, என்றும் கருதிய அந்த தயாரிப்பாளர்கள்  ரஜினியின் படமே வேண்டாம், என்று பின் வாங்கிவிட்டார்களாம். அதில் தயாரிப்பாளர் எஸ். தாணுவும் அடக்கம்.

 இதனால், வேறு சில தயாரிப்பாளர்களிடம் ரஜினி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும், அவர்களும் ரஜினியின் சம்பள தொகையால் பின்வாங்க தொடங்கியுள்ளார்கள். இன்னும் தாமதித்தால் தனது கால்ஷீட் வீணாகிவிடும் என்பதால்  சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே ரஜினிகாந்த் மீண்டும் செல்ல, அவர்களும் ரஜினியின் சம்பளத்தால் சற்று தயங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் ‘பேட்ட’படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் அப்படத்துக்குக் கொடுத்தை விட 10 கோடி அதிகமாக அதாவது 60 கோடி மட்டுமே தர முன்வந்துள்ளதால் அங்கேயும் பேச்சு வார்த்தை இழுபறியாக இருப்பதாகவே தகவல்.

இந்நிலையில் சற்றுமுன்னர் கிடைத்த தகவல்களின்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ரஜினி நடிப்பதும் அப்படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது. குடும்ப செண்டிமெண்டுகளை கதையாக்குவதில் கரைகண்டவரான இந்த ரஜினி படத்தில் அண்ணன் தங்கை செண்டிமெண்டைக் கையில் எடுக்கவிருக்கிறாராம். ரஜினியின் சம்பளமாக 75 கோடி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.