இந்தியாவின் மிக பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் என தன்னை பாகுபலி படம் மூலம் நிலைநிறுத்திக்கொண்டவர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

 தற்போது அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். 

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இருமடங்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது அடுத்தபடமாக இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை திரைப்படமாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் மோகன்லால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர்கான், 'ராஜமெளலி மகாபாரதம் கதையை படமாக எடுத்தால் கிருஷ்ணன் அல்லது கர்ணன் கேரக்டரில் நடிக்க விருப்பம்' என்று தெரிவித்திருந்தார். 

இதனால் மகாபாரத்தத்தின் முக்கிய கேரக்டரான கிருஷ்ணன், கர்ணன், துரியோதனன் ஆகிய கேரக்டர்களில் இவர்கள் மூவரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜமௌலி பாகுபலி 2 வெளியானதும் தெரிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.