நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் பேசப்போகும் விஷயங்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் என்று பேசியது குறித்தும், சீமான் குறித்தும் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய சில கருத்துகள் சர்ச்சையானது. பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து கமல் குறித்து தான் பேசிய பேச்சு குறித்து விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ், கமலை நேரில் சந்தித்தும் விளக்கம் அளித்தார். ரஜினி பிறந்த நாள் விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து  ராகவா லாரன்ஸ் பேசியதும் சர்ச்சையானது. ரஜினி தூண்டிவிட்டுதான் லாரன்ஸ் பேசுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
மேலும் கமல் குறித்து ரஜினி முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பேசியதை ரஜினி கண்டித்திருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. ரஜினி தொடர்பாக லாரன்ஸ் தொடர்ந்து சர்ச்சையாகப் பேசுவது ரஜினிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மீண்டும் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் பேசிய பேச்சு, இனிமேல் நான் பேசப்போகும் பேச்சு என அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே. நான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எந்த வகையிலும் பொறுப்பல்ல. ரஜினி பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வேண்டாம். தற்போது  இந்தி படப்பிடிப்பில் இருப்பதால் அதை முடித்து விட்டு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து  பேட்டி கொடுக்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ்  தெரிவித்துள்ளார்.