சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ”லஸ்ட் ஸ்டோரிஸ்” எனும் சென்சேஷனலான படங்களில் நடித்ததன் மூலம், இவர் பாலிவுட்டிலும் மிக  பிரபலமானவர். 

இவர் சமீபத்தில் திரையுலகில் நடைபெறும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து மனம் திறந்திருக்கிறார். திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே பாலியல் ரீதியான தொந்தரவு இருக்க தான் செய்கிறது.  ஹாலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் தைரியமாக இது குறித்து சொல்வது போல, பாலிவுட் பிரபலங்கள் வெளிப்படையாக சொல்வது இல்லை. அந்த அளவிற்கு தைரியம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என தெரிவித்திருக்கிறார். 

மேலும் இது குறித்து பேசிய அவர் நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கு இது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்க தான் செய்கிறது. ஆனால் இது குறித்து யாருமே வெளிப்படையாக சொல்வதில்லை.
அவ்வாறு சொன்னால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் இது போன்ற பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்டவர் மனம் திறக்கும் போது அவருக்கு உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ராதிகா ஆப்தே தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது தனக்கும் கூட இதே மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறி இருக்கிறார் ராதிகா. ஒரு முறை இரவு படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலில் தன்னுடைய அறைக்கு ராதிகா லிஃப்டில் பயணித்த போது, அவருடன் பணியாற்றிய நடிகரும் உடன் லிஃப்டில் வந்திருக்கிறார்.

ராதிகா ஆப்தேவிற்கு அந்த படப்பிடிப்பின் போது முதுகில் அடிபட்டிருக்கிறது. இதனை அந்த நடிகரும் கவனித்திருக்கிறார். இதனால் லிஃப்டில் வைத்து அவர் ராதிகாவிடம் ”நள்ளிரவில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் , என்னை கூப்பிடுங்கள்” என கூறி இருக்கிறார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே சக நடிகர்களிடமும், இயக்குனரிடமும் இதனை தெரிவித்திருக்கிறார்.
அவர்களும் அந்த நடிகரை கூப்பிட்டு விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த நடிகர், உதவும் நோக்கில் தான் நான் அப்படி கேட்டேன் என கூறி இருக்கிறார். பிறகு தான் அவர் எந்த உள்நோக்கத்துடன் ராதிகாவிடம் அப்படி பேசவில்லை எனும் உண்மை தெரியவந்திருக்கிறது. 

இந்த சம்பவத்தை உதாரணத்துக்கு கூறிய ராதிகா வெளிப்படையாக நம் பிரச்சனைகளை தெரிவிப்பதில் தவறொன்றும் இல்லை. அப்போது தான் உண்மையான பிரச்சனை வராமல் நம்மால் தடுக்க முடியும். என தெரிவித்திருக்கிறார்.