‘படுக்கை அறைக்காட்சிகள் என்று வரும்போது அதில் ஆண்,பெண் இருவருமே இருக்கும்போது என்னைப்போன்ற பெண்களை மட்டுமே டார்கெட் பண்ணி சர்ச்சைக்குள்ளாக்குவது ஏன்?என்று மிக நியாயமான கேள்வி எழுப்புகிறார் பிரபல இந்தி,தெலுங்கு,தமிழ் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் ‘தோனி’ ‘கபாலி’,ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கதைக்குத் தேவைப்படும் பட்சத்தில் முழு நிர்வாணமாகவே நடிக்கத்தயார் என்று போல்டாக எப்போதும் அறிவித்து அதை அடிக்கடி செயலிலும் காட்டி வருகிறார் ராதிகா ஆப்தே.

சமீபத்தில்  ‘த வெட்டிங் கெஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தேவும், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலும் இணைந்து நடித்துள்ளனர். இதில் படுக்கை அறை காட்சியொன்றில் ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதையொட்டி  ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் மத்தியில்  கண்டனங்களும் எழுந்துள்ளன.  

எப்போதும்போல் அந்த கண்டனங்களுக்கு அசராத அவர் ,“த வெட்டிங் கெஸ்ட்’ படத்தில் நிறைய நல்ல காட்சிகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு குறிப்பிட்ட படுக்கை அறை காட்சியை மட்டும் வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இது சமூகத்தின் மோசமான மனநிலையையே காட்டுகிறது. படுக்கை அறை காட்சியில் நானும் தேவ்படேலும் இருக்கிறோம்.ஆனால் தேவ் படேலை விட்டு விட்டு ராதிகா ஆப்தேவின் செக்ஸ் காட்சி என்ற பெயரில் என்னை மட்டும் குறிவைத்து வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தேவ் படேல் செக்ஸ் காட்சி என்று பகிர வேண்டியதுதானே. எதற்காக நடிகர் பெயரை  மட்டும் சவுகரியமாக   விட்டு விடுகிறார்கள் என்பது விளங்கவில்லை.” என்று செவிட்டில் அறைகிறார் ஆப்தே.