‘கொலையுதிர்காலம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை  நயன்தாரா குறித்து மிக மட்டமாக பேசியதற்காக நடிகர் ராதாரவி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க். தலைவர் மு.க.ஸ்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதில் கைதேர்ந்தவரான ராதாரவி ‘மி டு’ விவகாரத்துக்குப் பின்னர், அதிலும் தன் மீது பாடகி சின்மயி புகார் கூறிய பிறகு மிக மிகக் கேவலமாகவே பெண்கள் குறித்து மேடையில் பேசி வந்தார். ஆனாலும் இவ்வளவு நாளும் அவரது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் கூட இல்லாத நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லவேண்டிய ராதாரவியை அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்யக்காரணம் தி.மு.க.வுக்குப் பெண்கள் மீதுள்ள அக்கறைதான் காரணமா? இல்லவே இல்லை.

நேற்று முழுக்கவே நடந்த சம்பவம் குறித்து நயனைவிட அதிக கொந்தளிப்பில் இருந்தவர் அவரது இந்நாள் காதலர் விக்னேஷ் சிவன். தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவியை அவருக்கு இணையாக இறங்கி வறுத்தெடுத்துக்கொண்டிருந்தவர் அப்பேச்சை கைதட்டி ரசித்த பத்திரிகையாளர்கள் குறித்தும் அசிங்கமான கமெண்ட்கள் போட்டார்.

அத்தோடு நிற்காமல் நயனின் அனுமதியோடு அவரோடு ‘நண்பேண்டா’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய இரு படங்களில் ஜோடி போட்டு நடித்த உதயநிதி ஸ்டாலினைத் தொடர்புகொண்டு,’ராதாரவியின் இச்செயலுக்கு உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் நயன் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூட தயங்கமாட்டார்’ என்று மிரட்டியிருக்கிறார்.

இந்த மிரட்டலின் எதிரொலி உதயநிதியிடமிருந்து ஸ்டாலினுக்குப் போய் அது ராதாரவியின் சஸ்பென்சனில் போய் முடிந்திருக்கிறது. பெண்கள் குறித்து யாராவது அவதூறாகப் பேசினால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது’ என்ற ஸ்டாலினின் முழக்கத்தின் பின்னே இருப்பது இதுதான்.