’தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்துக்கே போகாமல் நான் ஜாலியாக வீட்டில் ஓய்வெடுப்பது இதுவே முதல்முறை இதற்கு காரணமாக இருந்த அவங்களுக்கு நன்றி’ என்று நடிகை நயன்தாராவுக்கு ‘கொரில்லா’ விழா மேடையில் நன்றி சொன்னார் நடிகர் ராதாரவி.

‘கொலையுதிர் காலம்’ பட ஆடியோ வெளியீட்டு விழா நயன் குறித்து ராதாரவியின் சர்ச்சைப்பேச்சு அவ்வளவு லேசில் மறந்திருக்காது. அதைத் தொடர்ந்து திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்ப்பட்ட ராதாரவி அடுத்தடுத்த மேடைகளில் தனது அநாகரிகப்பேச்சைக் குறைத்துவருகிறார். இந்நிலையில் ஜீவாவின் ‘கொரில்லா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,”"இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பதே தெரியவில்லை. தோற்றவர்களும் கொண்டாடுகிறார்கள், ஜெயித்தவர்களும் கொண்டாடுகிறார்கள்.

 நான் தனிக்கட்சி தொடங்காததற்கு காரணம் கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினால் ஜெயித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. எனவே கூட்டம் கூடுவதை வைத்து யாரும் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது புரிந்ததால் தான் நான் புதுக்கட்சி தொடங்கவில்லை.

தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்துக்கே போகாமல் நான் ஜாலியாக வீட்டில் ஓய்வெடுப்பது இதுவே முதல்முறை. இந்த வாய்ப்பு வருவதற்கு அவங்க தான் காரணம். அதனால் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்", என்றார். ராதாரவி அவங்க என்று குறிப்பிட்டது சாட்சாத் நயனைத்தான். அந்த பயம் இருக்கட்டும்.