ரூபாய் எட்டு கோடிக்கும் மேல் தான் செய்த ஊழல்களை மறைக்கவே ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்துவதில் பிடிவாதம் காட்டுகிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் என்ற குற்றச்சாட்டுகளோடு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் ஆகியோர் தலைமையில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, விஷால் தான் ஊழல் செய்யவில்லை என்பதை விஷால் நிரூபிக்கவேண்டும் என்று பல மாதங்களாகவே அவரது எதிரணியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு இன்று ஒரு பதில் அறிக்கை வெளியிட்ட விஷால், இளையராஜா 75’ நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு மார்ச் 3ம் தேதியன்று பொதுக்குழுவைக் கூட்டி கணக்கை ஒப்படைப்பதாகவும், அதே தேதியில் தேர்தலும் அறிவிப்பையும் வெளியிட்டு, அந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

விஷாலின் இந்த அறிக்கையில் உள்ள உள்குத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட எதிரணியினர், அவர் இளையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி, எடுத்த பணத்தை மறுபடியும் உள்ளே போட்டு அனைவரையும் குழப்பப்பார்க்கிறார் என்றும், இதுவரை ராஜாவுக்கு சம்பளம் கொடுப்பதற்காக 3.5 கோடி, நிகழ்ச்சிக்கு செட் போடுவதற்காக 2.5 கோடி என்று அவர் எழுதியுள்ள அத்தனை கணக்குகளுமே பொய்யானது என்றும்,  பண மோசடி செய்த வழக்கில் அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

இதே எதிரணியின் இன்னொரு பிரிவினர், விஷால் இளையராஜா நிகழ்ச்சியை நடத்திவிட்டால், அதில் வரும் பணத்தைக்கொண்டு இதுவரை செய்த ஊழல்களை மறைத்துவிட வாய்ப்புள்ளதால், அந்நிகழ்ச்சியை தடைசெய்தே ஆகவேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வழக்கு மீதான விசாரணை வரும் திங்களன்று நடைபெறவிருக்கிறது.