Producers are turns directors nowadays

ஒரு பக்கம் ஹீரோக்கள் தங்களது படங்களை தாங்களே தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட இன்னொரு பக்கம் புது இயக்குநர்களை வளர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் சில இயக்குநர்கள். சில தயாரிப்பாளர்களோ தாங்களே படம் இயக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். 

ஷங்கர்
ஷங்கர் தான் இப்போதைய இயக்குநர்களில் இந்த முயற்சியில் முதலில் இறங்கியவர். மெகா பட்ஜெட்டில் படம் இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய பேனரில் தன்னிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் படம் இயக்க வாய்ப்பளித்தார். அப்படி உருவானவர்கள் தான் காதல் பாலாஜி சக்திவேல், 23ஆம் புலிகேசி சிம்புதேவன், வெயில் வசந்தபாலன், ஈரம் அறிவழகன் ஆகியோர். சில காலம் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தவர் இப்போது மீண்டும் இம்சை அரசன் பார்ட் 2 மூலம் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

லிங்குசாமி
குதிரைகளை வைத்து பணக்காரர் ஆனவர் யானையை வைத்து கடன்காரர் ஆனது போன்ற சுழலில் சிக்கித் தவிக்கிறார் லிங்குசாமி. உத்தம வில்லனும் அஞ்சானும் லிங்குசாமியை கடன்காரராக்கி அவர் தயாரித்த படங்களையும் ரிலீஸ் செய்ய விடாமல் முடக்கி போட்டுவிட்டது. தன்னுடைய அசிஸ்டெண்ட்களுக்கு ஷங்கர் பாணியில் வாய்ப்பு தந்தவர் தான் லிங்குசாமி. விரைவில் மீண்டு வர வேண்டும்.

கவுதம்மேனன்
கவுதம்மேனனும் புதிய இயக்குநர்களுக்கு தனது பேனரில் படம் பண்ணும் வாய்ப்பு தந்து அழகு பார்க்கிறார். இப்போது கூட துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் ஒரு தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார்.

அமீர்
சில காலம் இயக்கத்தையே நிறுத்தி வைத்திருந்த அமீர் தன்னுடைய உதவியாளர் எடுத்த ஒரு நல்ல படத்தை முடிக்கவும் ரிலீஸ் செய்யவும் உதவி செய்திருக்கிறார்.அச்சமில்லை அச்சமில்லை என்ற அந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்னை பற்றி பேசவிருப்பதால் அமீர் கையில் எடுத்தவுடன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அட்லீ
மூன்றாவது படத்திலேயே பெரிய சம்பளம் பார்த்துவிட்ட அட்லீ தன்னுடைய உதவியாளர் இயக்க சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்து வருகிறார். தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்கிறார். 

ரஞ்சித்
கபாலி படம் மூலம் முன்னணி இயக்குநர் ஆகிவிட்ட ரஞ்சித் தனது பட கம்பெனி மூலம் இயக்குநர் ராம் உதவியாளர் மாரி செல்வராஜை இயக்குநர் ஆக்கியிருக்கிறார். இன்னும் படங்கள் தயாரிக்க புது இயக்குநர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிரபு சாலமன்
இயக்குநர் பிரபு சாலமனும் புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் கம்பெனி தொடங்கியுள்ளார். சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தை தயாரித்திருப்பது பிரபு சாலமன் தான்.

கார்த்திக் சுப்புராஜ்
இந்த வரிசையில் இப்போது இணையவிருப்பது கார்த்திக் சுப்புராஜ். ஒரு காமெடி கதையை கேட்டு ஓகே சொல்லி வைத்திருப்பவர் விரைவில் தனது தயாரிப்பு நிறுவன அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

தயாரிப்பாளர் டூ இயக்கம்
இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆவது போலவே தயாரிப்பாளர்களும் இயக்குநர்களாக உருவெடுத்து வருகிறார்கள்.

சுரேஷ் காமாட்சி
அமைதிப்படை பார்ட் 2 , கங்காரு படங்கள் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சுரேஷ் காமாட்சி மிக மிக அவசரம் என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சிவி.குமார்
தயாரிப்பாளர் சிவி.குமார் மாயவன் என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
டி.சிவா
இந்த வரிசையில் தயாரிப்பாளர் டி.சிவாவும் இயக்குநராக விரைவில் அவதாரம் எடுக்கவுள்ளார்.

இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதும் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஆவதும் நல்ல படைப்புகள் உருவாகி வருவதன் வெளிப்பாடு தான். இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்யமான விஷயம் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.