80 மற்றும் 90 களில் வாரத்திற்கு 2 மூன்று படங்கள் தான் வெளியாகும். அப்படி வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களை கூட கடந்து வெற்றிகரமாக ஓடும்.

ஆனால் இப்போதோ வாரத்திற்கு 6 மற்றும் 7 படங்கள் கூட வெளியாக தயாராகின்றன. அவைகளில் இரண்டு படங்கள் கூட ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யும் படங்களாக இருப்பது இல்லை. ஒரு வேலை சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவை திருட்டு கதை என சிலரால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சைகளை சந்திக்க நேரிடுகிறது.

பொதுவாக எந்த ஒரு பொருளும் உற்பத்தி அதிகமானால் மார்க்கெட்டில் அதன் டிமாண்ட் குறைந்துவிடும் என்பது வர்த்தகத்தின் அசைக்கமுடியாத விதி. இதனை கோலிவுட் திரையுலகினர் உணரவேண்டும் என்று, சிறந்த படங்களை தேர்வு செய்து தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளம் மூலம் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேள்வி ஒன்றை கேட்டது. அந்த கேள்வி என்னவென்றால், 'குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு நடிகரின் படம் வரலாமே...ஓரே நடிகர் படங்கள் தொடர்ந்து 5 வாரங்களுக்கு ஒருமுறை வருவதை கூட கட்டுப்பாடு செய்தால் இந்த குழப்பம் சற்று குறையும்..." என்பது தான்.

இந்த கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு, 'அனைத்து தயாரிப்பு தொழிலிலும் உள்ள பிரச்சினைதான். தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்படும் பொழுது எந்தப்பொருளும் வீணாவதை தவிர்க்க இயலாது. தயாரிப்பாளர்கள் இதன் ஆபத்தை உணர்ந்தே படம் ஆரம்பிக்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே படங்களை அனுகுவது வெறும் ஏமாற்றங்களையே தரும்! என்று எச்சரிக்கையோடு கூறியுள்ளார்.