'இளையராஜாவின் 75 வது பிறந்தநாளில் பேசிய ரஜினி அவர் எத்தனையோ படங்களுக்குப் பணம் வாங்காமலேயே இசையமைத்திருக்கிறார் என்று பொத்தாம்பொதுவாய் சொல்லியிருந்த நிலையில், ஆரம்பகாலத்தில் தனது முதல் இரு படங்களுக்கு ராஜா பணம் வாங்காமலேயே இசையமைத்த ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை தயாரிப்பாளரும்,பிரபல நடிகருமான சங்கிலி முருகன் அண்மையில் நடிகர் சித்ரா லட்சுமணுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அப்பேட்டியில் தனது துவக்க கால சினிமா அனுபவங்கள் குறித்து மனம் திறந்துபேசிய சங்கிலி முருகன்,‘’மதுரையிலேருந்து நாடகம் போடணும், சினிமாவில் நடிக்கணும் என்று சென்னைக்கு வந்துவிட்டேன். பாலமுருகன் குழுவில் நடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பெல்லாம் வரவில்லை. அப்போது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், ‘உனக்கு 40 வயசுக்குப் பிறகுதான் யோகம் இருக்கு. அப்பதான் நடிகரா வெளியே தெரிவே’ன்னு சொன்னார். அப்போ எனக்கு 19 வயது.அப்பலாம், நாடகம் போடுவதற்கென்றால், கொஞ்சமாவது பிரபலமான நடிகர் நடிக்கவேண்டும். நான் ஓஏகே.தேவரிடம் சென்று, நடித்து உதவும்படி கேட்டேன். அவரும் சரியென்று சம்மதித்தார். திருச்சி பொருட்காட்சியில் இரண்டு நாடகங்கள் போடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அறைக்கு வந்து உட்காரக்கூட இல்லை. அப்போது இரண்டுபேர் வந்தார்கள்.

‘யாருப்பா’ என்று கேட்டேன். ’பாவலர் வரதராஜன் இருக்கார்ல’ என்றார்கள். ‘ஆமாம், வரதராஜன். நமக்கு நல்லாத் தெரியுமே’ என்றேன். ‘அவரோட தம்பிங்க நாங்க. நான் பாஸ்கரன். இவன் ராஜா’ என்று அறிமுகம் செய்துகொண்டார்கள். ‘என்ன விஷயம்’ என்றேன். ‘நாடகத்துக்கு மியூஸிக் போடணும்ங்கறதுதான் ஆசை’ என்றார்கள்.எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இப்பதான் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். சரியான நேரத்துக்கு வந்திருக்காங்களேனு யோசிச்சேன். அட்வான்ஸ் வாங்கினதுக்கு முதல் நாளோ, மறுநாளோ வந்திருந்தாக் கூட தெரியாது. வாங்கின கையோட, இவங்களும் வந்திருக்காங்களேனு பிரமிப்பா இருந்துச்சு. கடவுள் இப்படித்தான் நல்லவங்களை நமக்கு அனுப்பி வைச்சிருக்கார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆர்மோனியமும் தபேலாவும் வைச்சிருந்தாங்க. நான் உடனே, கமலா என்பவரிடம் ‘இந்தப் பசங்க எப்படி வாசிக்கிறாங்கன்னு கேட்டு சொல்லுங்க’ன்னு அனுப்பிவைச்சேன். அவங்களும் போய் வாசிச்சாங்க. அப்புறம் கமலா, ‘நல்லா வாசிக்கிறாங்க. பிரமாதமா வருவாங்கன்னு தோணுது. தங்குறதுக்கு கூட இடமில்லையாம். நம்ம வீடு ஒண்ணு சும்மாதானே இருக்கு. அங்கே தங்கிக்கச் சொல்லிருக்கேன்’ என்று கமலா தெரிவித்தார்.அப்புறம் வரிசையா நிறைய நாடகங்கள். ராஜாவோட இசை. விருதுநகர் பொருட்காட்சியில் நாடகம் போடும் போது, ‘அண்ணே, புதுசா ஒண்ணு முயற்சி செஞ்சிருக்கோம். கேளுங்கண்ணே’ என்றார்கள். ஓஏகே.தேவர், நான் இன்னும் எல்லாரும் உக்கார்ந்து கேட்டோம். கேட்டு முடிச்சதும் ‘இதான்யா இப்போ லேட்டஸ்ட். பசங்க பின்றாங்கய்யா’ என்று ஓஏகே.தேவர் சொன்னாரு. பின்னாடி இளையராஜா ‘பத்ரகாளி’ மாதிரி படங்களுக்கு பாட்டு போட்டப்ப, ‘தம்பி, நம்ம நாடகத்துக்கு அப்பவே இதைப் போட்டுருக்கீங்க’ என்று சொல்லுவேன்.

அப்புறம் பல வருஷங்கள் கழிச்சு, சொந்தமா படம் எடுக்க முடிவு செய்து, தட்டு நிறைய கல்கண்டும் பணமுமா எடுத்துக்கிட்டுப் போனேன். ‘என்னண்ணே. படம் தயாரிக்கிறேன்னு இறங்கியிருக்கீங்க. எனக்கு பயமா இருக்குண்ணே’ என்றார் இளையராஜா. ‘ஜெயிச்சிருவேன் தம்பி. நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னேன். ‘சரிண்ணே’ என்று சொன்ன இளையராஜா, தட்டில் இருந்த கல்கண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். பணத்தைத் தொடவே இல்லை.‘தம்பி, சம்பளத்தை எடுத்துக்கோங்க’ என்றேன். ‘சம்பளம்லாம் வேணாம்ணே. நீங்க நல்லா இருக்கணும். நல்லா வரணும். நான் பண்ணித்தரேன். ஆனா சம்பளம்லாம் வேணாம்ணே’ என்று பணம் வாங்க மறுத்துவிட்டார். நான் நெகிழ்ந்து போனேன். என்னுடைய முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளமே வாங்காமல்தான் இசையமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது’என்று கூறியிருக்கிறார்.