படப்பிடிப்பு துவங்கி ஒருவாரம் கூட ஆகாத நிலையில் ‘தளபதி 64’படம் குறித்து பரபரப்பாக கிளம்பிய வதந்தி ஒன்றுக்கு அப்பட நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பாதீர்கள் என அப்பட தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மாநகரம்’,’கைதி’படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி,சாந்தனு பாக்யராஜ், பிரபல மலையாள ஹீரோ ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னைக்கு வெளியே ஒரு பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்க்கே பெரிய சம்பளம் என்னும் நிலையில் மேலும் மூன்று ஹீரோக்களை படத்தில் கமிட் பண்ணியிருப்பதால் படத்தின் துவக்கத்திலேயே தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோ அலறிவிட்டதாகவும் அதனால் அவர் தன்னை படத்திலிருந்து விடுவித்து விடும்படி தனது உறவினர் நடிகர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் செய்திகள் பரவின. தற்போது அச்செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அந்நிறுவனம்,... இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான நெகடிவ் செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. முதல் ஷெட்யூலை விரைவில் முடிக்கவிருக்கிறோம்’என்று பதிவிட்டுள்ளனர்.