போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படம் தொடர்பாக சில மோசடியான அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் அதை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜீத்தின் தல60 படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இதில் பைக் ரேஸராக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்னொரு போலீஸ் அதிகாரி வேடமும் இருப்பதாக புதுக்கதை ஒன்று கிளம்பியுள்ளது. இதில் மற்ற நடிகர் குறித்த எந்த அதிகாரபூர்வ செய்திகளும் வராத நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்த குட்டிப்பொண்ணு அனைகா மட்டும் தான் கமிட் பண்ணப்பட்டுள்ளதாக ட்விட் பண்ணியிருந்தார்.

இந்நிலையில் ’தல 60'  படம் குறித்து நேற்று மாலை படக்குழு தரப்பில் இருந்து எச்சரிக்கை பதிவு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, தல 60 படத்தில் நடிக்க நடிகர்,நடிகைகளை தேர்வு செய்ய நாங்கள் எந்த ஆடிஷனையும் நடத்த வில்லை. அது தொடர்பாக  எந்த ஏஜென்சியிடமும் கேட்கவும் இல்லை. ஆனால் கடந்தசில நாட்களாக தல 60 படத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என போலியான தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவை எதுவும் உண்மையில்லை.  அப்படியான போலியான செய்தியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.