ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸ் உடன் காதலில் விழுந்தது எப்படி என்று, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில், நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் பிரபலம் காரணமாக, இவருக்கு, ஹாலிவுட் படங்களில் நடிக்க, சில ஆண்டுகளுக்கு முன், வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா, படிப்படியாக, ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தனக்கென உலக அளவில் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், 36 வயதாகும் அவர், 26 வயதே ஆகும் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் உடன் காதலில் விழுந்ததாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபற்றி பிரியங்கா சோப்ரா அமைதியாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மட்டும் உறுதிபடுத்தி வந்தனர். நீண்ட நாட்களாக, இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தனர். சில மாதங்கள் முன்பாக, ஜோத்பூரில் பிரியங்காவுக்கும், நிக் ஜோனஸ்க்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் சிலர் மற்றும் கலந்துகொண்டனர். 

இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்ற பிறகே, பிரியங்காவுக்கு திருமணம் நடைபெறும் தகவல் உறுதியானது. மேலும், தகவல் தெரிந்த பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். தன்னைவிட 10 வயது குறைந்த நபரை பிரியங்கா திருமணம் செய்கிறாரா, எனப் பல்வேறு தரப்பிலும் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பிரியங்காவும் இந்த தகவலை வெளிப்படையாக உறுதி செய்துள்ளார். தங்களின் திருமணத்தை முன்னிட்டு, பிரியங்கா சோப்ரா ,தனது நண்பர்களுக்கு, சிறப்பு விருந்து ஒன்றை அளித்துள்ளார். 

நியூயார்க்கில் நடந்த இந்த விருந்தில் ஏராளமான சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அந்த விருந்தின்போது, நிக் ஜோனஸ் மீது காதலில் விழுந்தது எப்படி என்று, பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், என் திறமையை மதிக்கும் காரணத்தால், எனக்கு நிக் ஜோனஸ் மீது காதல் வந்தது. அவரது வேலை போலவே என் வேலையையும் அவர் மதிக்கிறார். அவரைப் போலவே, எனது திறமையையும் சரியாகப் புரிந்துகொள்கிறார். 

மற்றவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை, அவர் தருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோலவே, நானும் அவரோட திறமை மற்றும் வாழ்க்கையை மதிக்கிறேன். அவருடன் சரிசமமாக, விட்டுக் கொடுத்து வாழ்வேன். வாழ்க்கை என்பது பலவித விட்டுக் கொடுத்தலில் அடங்கிய ஒன்றுதான்,’’ என்று பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். 

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இடையிலான திருமணம் வரும் டிசம்பர் மாதம், ஜோத்பூரில் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில், 2 குடும்பத்தினரின் மிக நெருங்கிய நபர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழா, 4 நாட்களுக்கு பிரமாண்டமாக நடக்கும் என்று, பிரியங்காவின் குடும்ப வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. திருமண விழாவில் பங்கேற்க, நிக் ஜோனஸ், தனது நண்பர்கள் 100 பேரை அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், பிரியங்கா சோப்ரா, வழக்கம்போல, ஜாலியாக, தி ஸ்கை இஸ் பிங்க் படப்பிடிப்பில் பங்கேற்க தொடங்கியுள்ளார்.